தமிழகத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெகிழி பை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து நெகிழிப் பைகள் பயன்பாட்டை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு நெகிழி பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கியது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் துறை ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு எளிதாக துணிப்பைகள் கிடைக்கும் விதமாக பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறுகையில், பொது இடங்களில் மலிவு விலையில் மஞ்சப்பை கிடைப்பது சவாலாக உள்ளது. இதை போக்கும் விதமாக பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் துணிப்பை கொடுக்கும் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பைக்கு எவ்வளவு தொகை என்பது உறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த இயந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட தொகையை அந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஒரு துணிப்பையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.