தர்மபுரியில் ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர்.
இது குறித்து ஊர் மக்களிடம் விசாரிக்கையில், திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடி சத்தம் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் அளவிற்கு அதிக அளவில் ஒலித்தது. இதைத்தொடர்ந்து வெளியில் வந்து பார்த்த போது வானத்தில் ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் சென்று கொண்டிருந்தது.
சத்தம் எப்படி ஏற்பட்டது. ஹெலிகாப்டரில் வந்தவர்கள் ஏதேனும் சோதனை முயற்சியில் ஈடுபட்ட போது இந்த சத்தம் நிகழ்ந்ததா என்பது குறித்து தெரியாமல் கிராம மக்கள் குழம்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் கிராம பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிசத்தம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.