அசாம் மாநிலத்தில் உள்ள நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட நபர் திடீரென உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த போலீசார் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
தன்னிடம் இவ்வளவு பணம் இல்லை என்று சபிகுல் இஸ்லாம் மறுத்துள்ளார். அதனால் கோபம் அடைந்த போலீசர் சபிகுல் இஸ்லாமை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். உடனே தகவல் அறிந்த சபிகுல் இஸ்லாமின் மனைவி காவல் நிலையம் வந்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குடும்பத்தினருடன் மருத்துவமனை சென்ற போது சபிகுல் இஸ்லாம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த சபிகுல் இஸ்லாமின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.