நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை விமர்சித்துள்ளார். அதில், “மே 1, 2020: ரூ.69.5, மே 1, 2021: ரூ.95.4, மே1, 2022: ரூ.105.4, மே 22, 2022: ரூ.96.7 என பதிவிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனி நாள் தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரும், மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.