கடலூர் மாவட்டம் உச்சிமேடுகிராமத்தில் அறிவழகன் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது 10 மாதமேஆன பரமேஸ்வரியின் 2வது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.
ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர். குளிர்பானம் என நினைத்து பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகள் கையில் எடுக்கும் அளவிற்கு அபாயகரமான பொருட்களைப் பெற்றோர்கள் வீட்டில் வைக்கக்கூடாது என்பது இப்போதும் தேவைப்படும் முக்கிய விழிப்புணர்வாக உள்ளது.