அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் உள்ளே ஒழுகுவதால் நனைந்து கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் கூறும்போது, மழை நீர் ஒழுகுவது பேருந்தின் இருக்கையில் அமர முடியாமல் குடைபிடித்து நின்றுகொண்டு பயணம் செய்கிறோம். இதனால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் பழுதடைந்த நிலையில் இருக்கும் பேருந்துகளை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.