ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது காரில் கடத்தி வந்த 4 1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தனர். உடனே காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்து பார்த்தபோது சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவிதாம்கோடு செட்டியார் விளையில் வசித்த 47 வயதுடைய செல்வின், திருவிதாங்கோடு கமலபந்தி தெருவில் வசித்த 31 வயதுடைய மனோஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செல்வின் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருக்கின்ற உடற்பயிற்சி நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது மும்பையில் இருக்கின்ற ஒரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் அர்ச்சனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து மனைவியின் மூலம் கஞ்சா கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வின் ஊருக்கு வருகின்ற போதெல்லாம் நாக்பூரிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து நண்பருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு காரில் கடத்தி சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செல்வின், மனோஜ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து காரில் இருந்த 4 கிலோ 477 கிராம் கஞ்சா, ரூ 30,000 பணம், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.