19 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்துவதற்கு ரூ 25 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியில் எலியத்தூர் செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் திட்டம் 2021 – 2022- ன் கீழ் ரூ 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கே.எஸ் ராஜகுமார், உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி, உதவி பொறியாளர் தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் அனைத்து தரைமட்ட பாலங்களையும் உயர் மட்ட பாலங்களாக மாற்றப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக 19 தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுவதற்கு ரூ 25 கோடி 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 11 தரைமட்ட பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்தது. மேலும் 8 பாலங்களில் முதற்கட்ட பணிகள் நடைபெறுகிறது.
சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட பங்காரம் முதல் பைத்தந்துறை வழியில் செல்லும் ரோட்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரூபாய் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் உயர்மட்ட பாலத்தின் தரம், கட்டுமான பணிகளை பார்வையிட்டு இருந்தேன்.பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்து உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்புடைய ஒப்பந்தக்காரர்கள் அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.