தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் விஜய் மகள் இயக்க தெற்கு நகர இளைஞரணியில் அக்கிம் என்பவர் பொருளாளராக இருக்கிறார்.
இவரது மகளான அப்சனாவிற்கும், ஹாரிஸ் என்பவருக்கும் இன்று கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் தனியார் மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு திடீரென மேடை ஏறி மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.