Categories
தேசிய செய்திகள்

மழை நிவாரணம்: ரூ.17.86 கோடி எப்போது கிடைக்கும்?…. மாநில அரசு வலியுறுத்தல்….!!!!

புதுச்சேரியில் கடந்த வருடம் இறுதியில் அதிகளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் அரசு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது. மேலும் சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய் 7.10 கோடியை அரசு வழங்கியது. இதன் வாயிலாக புதுச்சேரி, ஏனாம், காரைக்கால், பகுதிகளை சேர்ந்த 7ஆயிரத்து 16 விவசாயிகள் பயன்அடைந்தனர். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூபாய் 5.97 கோடி வழங்கப்பட்டது.

அத்துடன் காரைக்காலை சேர்ந்த 731 விவசாயிகளுக்கு ரூபாய் 97.55 லட்சம், ஏனாமை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூபாய் 15.90 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த அனைத்து நிவாரணமும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது. எனினும் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடை உள்ளிட்ட பிற இழப்புகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. கடந்த வருடம் இயற்கை பேரிடரை எதிர்கொண்ட தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில் புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல்வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த தொகை கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மழை நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு மாநில அரசு சார்பாக மீண்டும் கோப்பு அனுப்பி வலியுறுத்தப்பட்டது.

புது தலைமைச் செயலர் ராஜிவ் வர்மாவும், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட மழைநிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தி இருக்கிறார். மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு வருடந்தோறும் ரூபாய் 5 கோடி வழங்குகிறது. இதற்கிடையில் மாநிலஅரசு பேரிடர் நிதியாக 1.5 கோடி வழங்குகிறது. இந்த 6.5 கோடி ரூபாயை வைத்து மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து என்று அனைத்து செலவுகளையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பேரிடர் நிதியானது பெரியளவில் இல்லாததால் வருடந்தோறும் மழை நிவாரணத்தின் போது பேரிடர் துறை உடனே துயர் துடைக்க முடியாமல் தவித்து வருகிறது. பிற துறைகளிலிருந்து உதவிகளை எதிர்பார்த்து நிவாரணம் வழங்கி வருகிறது. ஆகவே பேரிடர் நிவாரணம் நிதியை அதிகரிக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் புதுச்சேரிஅரசானது விரைவில் வலியுறுத்த திட்டமிட்டு உள்ளது.

Categories

Tech |