புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து வந்தது.
இதற்கிடையே 2011ம் ஆண்டு தானே புயலால் இரண்டு பிரிவுகள் கடுமையாக சேதம் அடைந்து அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த ஊதியமும் வழங்கப்படாத சூழலில் இந்தப் பஞ்சலையை வருகிற ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி மூடப்படும் என வந்திருக்கும் அறிவிப்பு இங்கு பணிபுரியும் 619 தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பஞ்சாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கும் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு ஆலையை மூடுவதற்கான உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென தொழிலாளர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது எந்த காரணத்தைக் கொண்டும் மில்லை மூட அரசு விடாது என தெரிவித்துள்ளார்.