சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது. இவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.