இந்தியாவில் முதல் மற்றும் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து தடை உள்ளிட்ட கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டது. இதேபோல் விமான போக்குவரத்தானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. எனினும் விதிவிலக்காக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக விமான சேவை தொடர்ந்தது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு பின், அண்மைகாலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அண்மைநாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் சவுதிஅரேபியா அரசானது இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தன்னுடைய குடி மக்களுக்கு தடைவிதித்து இருக்கிறது.
அந்த வகையில் இந்தியா உட்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற 16 நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடைவிதித்து இருக்கிறது. சவுதி அரேபியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவுமில்லை எனவும் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.