மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்காரவிளை கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்தாய்(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் செல்லத்தாய் தான் நடத்தி வரும் துணிக்கடையில் இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லுங்கி என்ன விலை என கேட்டுள்ளனர். இதனையடுத்து விலையை கூறியவாறு செல்லத்தாய் லுங்கியை எடுத்து காண்பித்துள்ளார். அந்த சமயம் வாலிபர் ஒருவர் செல்ல தாயின் முகத்தை கையால் மூடினார். மற்றொரு வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனால் மூதாட்டி திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து முகத்தில் படுகாயம் ஏற்பட்ட வலியில் துடித்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.