கொடைக்கானலில் நாளை மறுநாள் கோடைதிருவிழா தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அணி வகுத்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் வருகிற 29-ஆம் தேதி வரை மலர்க் கண்காட்சியும், நாளை மறுநாள் முதல் ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சுற்றுலாத்துறை மற்றும் கோடை விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கிராமிய நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுக்கள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி , நாய்கள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் விசாகன், அமைச்சர் பெரியசாமி, எம் .ஆர். கே. பன்னீர்செல்வம், அர. சக்கரபாணி, மதிவேந்தன், எம். பி. வேலுச்சாமி, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் சார்பில் செய்யபடுகிறது.