கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரபட்டி, சாம்பல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்றுள்ளனர். இவர்கள் முகாம் முடிந்ததும் மினி பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஓசூர் ரிங் ரோட்டில் சீதாராம் நகர் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நதியா, அவரது 3 வயது குழந்தை, ராஜேஸ்வரி, தனலட்சுமி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.