சீனாவில் கோரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதுவரையில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசில் இருந்து பாதுகாத்துகொள்ள அந்நாட்டு மக்கள் முகத்தில் முகமூடி அணிந்து வருகின்றனர். அந்நாட்டில் நாளுக்குநாள் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு முகமூடிகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய மதிப்பில் ஆன்லைனில் ரூ 1, 400-க்கு விற்கப்படும் ஒரு பாக்ஸ் முகமூடிகளை பீஜிங்கில் உள்ள ஒரு மருந்துக் கடை, ரூ 8,700-க்கு விற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிக விலைக்கு விற்றதை உறுதி செய்து, அதிகாரிகள் 4,34,000 டாலர் அபராதம் விதித்தனர். இந்திய மதிப்பில் சுமார் 3.08 கோடி ரூபாய் ஆகும். மேலும், கடந்த 6 நாட்களில் மட்டும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்றதாக 31 புகார்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்