மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குருநாதன் என்ற மகன் உள்ளார். இதில் குருநாதனுக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும், ரித்தீஷ், யஸ்வந்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் பாண்டி தனது பேரனான யஸ்வந்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் புதூர்விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த கார் ஓட்டுநர் கண்ணன், அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டி மற்றும் யஸ்வந்த் ஆகிய 2 பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.