மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மங்கலத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கு நியாஸ் லுக்மான்(22), இஜாஸ் அகமது(14) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் கருங்காலக்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் வஞ்சிநகரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மதுரை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.