குடிமங்கலம் அருகே உள்ள ஆமந்தகடவு கிராமத்தில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட வரும் முட்டை கோழி பண்ணையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆமந்தகடவு கிராமத்தில் சுற்றிலும் ஏற்கனவே முட்டை கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. தற்போது புதிதாக பிஏபி கால்வாயில் முட்டை கோழி பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமன்றி ஊருக்கு அருகிலேயே இந்த கோழிப்பண்ணை அமைக்கப்படுவதால் ஈக்களின் தொல்லை அதிகமாகும் என்பதாலும், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்பதாலும் அரசு அனுமதி பெறாமல் இந்த கோழிப்பண்ணை கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் இதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நேற்று ஆமந்தகடவு குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியவாறு கோழி பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகளில் நிறுத்தக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் முட்டை கோழி பண்ணையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து புதிய முட்டை கோழி பண்ணை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.