கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக பொதுமுடக்கம், ஊரடங்கு என பல சிரமங்களை மக்கள் அனுபவித்தனர். இத்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இப்போதும் அதன் தாக்கம் சில நாடுகளிலிருந்து வருகிறது. இந்த நிலையில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ் சமீபத்தில் பிரிட்டனில் பரவ தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
உலகம் முழுதும் குரங்கு அம்மை காய்ச்சல் பரவிவரும் சூழ்நிலையில் இந்தியாவில் நோய் பரவலை தடுப்பதற்கு விமான நிலையங்கள், முக்கியமான துறைமுகங்கள் வழியே வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 4,800 செவிலியர்களுக்கான சம்பளம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏப்ரல்மாதம் முதல் கணக்கிட்டு உயர்வு வழங்கப்படும். இவர்களை போன்றே சுகாதார ஊழியர்கள் 2,400 பேருக்கான சம்பளம் 11,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் ஒமிக்ரான் பிஏ 4 வகை வைரஸ் இருவருக்கு கண்டறியப்பட்டு இருக்கிறது. எனினும் வைரஸ் பாதித்த அவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை. உலகையே ஆட்டிப்படைத்து வரும் குரங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவவில்லை. ஆகவே பொதுமக்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ளவேண்டாம். இருந்தாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது என அமைச்சரான மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஜூன் 12 ஆம் தேதி மாநிலத்தில் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.