வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சென்னை தலைமைச்செயலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கின்றது. இதனால் சென்னையில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியே சென்று வருகிறார்கள். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின் நாலாவது நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள 15-க்கும் அதிகமான டைல்ஸ்கள் நேற்று பிற்பகல் சட சட என்ற சத்தத்துடன் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவை தரையிலிருந்து பெயர்ந்து மேலே தூக்கிய நிலையில் இருந்தது. இந்த சத்தத்தை கேட்டு அங்கு இருந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கீழிருக்கும் வெற்றிடத்தில் உள்ள காற்று உஷ்ணமடைந்து டைல்ஸ்களை தள்ளி விட்டதால் வெளியேறிவிட்டது. இதன் காரணமாக விரிசல் ஏற்பட்டது என்று கூறினார்கள். இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து விரிசல் அடைந்த டைல்ஸ்களை உடைத்து அகற்றினார்கள். மேலும் அந்த இடத்தில் தற்காலிகமாக பச்சை கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளன.