மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழகுப்பம் பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன் என்பவருடன் சேர்ந்து கொள்ளுக்காரன்குட்டை-மருங்கூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை கண்காணிப்பு காவல்துறையினர் ரோந்து வாகனம் நிலைதடுமாறி வீரமணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த வீரமணி, மதன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.