பெல் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழகுமரேசபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு வெற்றிவேல் தனது மனைவி, மகள் மற்றும் நண்பரான ராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் காரில் மதுரையில் இருக்கும் சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார். இந்த கார் வடமதுரை அருகே சென்று கொண்டிருந்த போது வெற்றிவேல் தனக்கு வாந்தி வருவதாக தெரிவித்தார்.
இதனால் காரை ஓட்டி வந்த ராமமூர்த்தி வாகனத்தை நிறுத்திவிட்டு வெற்றிவேலை கீழே இறங்கச் செய்தார். அப்போது திடீரென வெற்றிவேல் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெற்றிவேல் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.