ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் ஒசஅள்ளி பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவருடைய மகன் 20 வயதுடைய ஹர்சா. இவர் டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகில் தனது சொந்தக்காரரான ராஜா என்பவருடைய வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார்கள். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஹர்சா பொம்மனூர் ஏரியில் குளிக்க சென்றார். அவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்தார்கள்.
அங்கு ஏரிக்கரையில் ஹர்சாவின் செருப்பு மற்றும் உடைகள் கிடந்தன. உடனே சந்தேகமடைந்த அவர்கள் மகேந்திரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்கள் அதன்பின் அவர்கள் ஏரிக்குள் இறங்கி தேடிப் பார்த்தார்கள். அப்போது ஏரிக்குள் ஹர்சா மூழ்கி இறந்து கிடந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.