Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரட்டைக் கொலை செய்துவிட்டு…. 8 வருடம் தலைமறைவு… ஆந்திராவில் சிக்கிய கொலையாளி..!!!!

இரட்டைக் கொலை செய்துவிட்டு கடந்த 8 வருடங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த கொத்தனார் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி நகரில் வசித்து வருபவர் குணசுந்தரி(27). இவர் அப்பகுதியில் வசித்த மாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் மகேஷ்குமார் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கணவர் மாரி இறந்துவிட்டார். இதனை அடுத்து குணசுந்தரி கடந்த 2014-ஆம் வருடம் ஆந்திரா மாநிலம் சூலூர் பேட்டையில் வசித்த கொத்தனார் ராஜ்(40) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தினார்.

அதன்பின் ராஜ்வின் கொடுமை தாங்கமுடியாமல் குணசுந்தரி புதுவண்ணார்பேட்டையில் உள்ள தனது தாய் நாகவல்லி வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் குணசுந்தரியை பார்ப்பதற்கு மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்த ராஜ் மனைவியின் மீது சந்தேகமடைந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த தகராறில் குணசுந்தரி, அவருடைய மகன் மகேஷ் குமார் ஆகிய 2 பேரையும் ராஜ் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து கொலையாளியை 8 வருடங்களாக தேடி வந்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜை பிடிப்பதற்கு வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யபாரதி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுந்தர வதனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது குற்றவாளி புகைப்படத்தை ஆந்திர மாநில போலீசார் வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பிவைத்து குற்றவாளியை பற்றி தகவல் தெரிந்தால் தங்களுடைய செல்போனுக்கு தகவல் அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் குற்றவாளியான ராஜ் இருக்குமிடத்தை ஆந்திராவை சேர்ந்த ஒரு இளைஞர் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராமேஷ் பாபுவிடம் தகவல் அளித்துள்ளார். கொலையாளி தனது வீட்டில் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும், அவர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருக்கின்ற ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு தினமும் இரவு 7 மணிக்கு வருவதாக காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் பதுங்கி இருந்து கொலையாளியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர். கடந்த 8 வருடங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த ராஜ் தற்போது காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஆந்திராவில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |