பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியிருப்பதாவது, அந்தியூர் பகுதியில் செயல்படுகின்ற பங்குகளில் தான் நாங்கள் பெட்ரோல் போடுகின்றோம். ஆனால் பெட்ரோல் போட்ட சிறிது நேரத்தில் வாகனங்கள் நின்று விடுகின்றன. உடனே சம்பவ இடத்திற்கு மெக்கானிக்கை வரவழைத்து சரி பார்த்தால் வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள்.
அதன்பின் வண்டியில் இருந்த பெட்ரோலை முழுவதுமாக அகற்றி விட்டு வேறு பகுதியிலிருந்து பெட்ரோல் வாங்கி ஊற்றி வண்டியை ஓட்டினால் வழக்கம்போல் ஓடுகிறது. பெட்ரோல் விலை அதிகமாக இருக்கின்ற நிலையில் கூலி வேலைக்கு செய்பவர்கள் பெட்ரோல் போடுவதை மிகவும் கடினம். அதில் இது போன்ற பிரச்சனை இருந்தால் நாங்கள் என்ன செய்வது. இந்த கலப்பட பெட்ரோலை ஊற்றி வருவதால் வாகனத்தில் என்ஜின் பழுதாகி விடுகிறது. எனவே பெட்ரோல் துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்குகளில் ஆய்வு செய்து தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்த தண்ணீர் கலந்த பெட்ரோலை கேனில் பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் போட்டு விட்டார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.