வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் போலி கடிதம் கொடுத்து ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள ராம் பிரசாத் என்பவர் தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்த பொழுது சென்ற 2019 ஆம் வருடம் எனது தோழர் மூலம் மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த பிரேம் ஆனந்த் அவரின் மனைவி பரமேஸ்வரி உள்ளிட்டோர் அறிமுகமாகி பிரேம் ஆனந்த் நான் ஒரு கிறிஸ்தவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகராக இருப்பதாகவும் அவரின் மனைவி டி.கல்லுப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பதாகவும் கூறி தாங்கள் கிறிஸ்தவ அமைப்பின் மூலம் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்கள்.
மேலும் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியர் பணி காலியாக உள்ளது. நீங்கள் 10 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மூன்று லட்சத்தை முன்பணமாக வாங்கினார்கள். பின் கிறிஸ்தவ அமைப்பில் தீர்மானம் தனது வேலைக்காக நிறைவேற்றி இருப்பதாகக் கூறி மேலும் இரண்டு லட்சத்தை பல தவணைகளில் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். என்னைப் போலவே ராஜேஷ் என்பவரிடம் 2 லட்சம், ராஜா என்பவரிடம் 250000, பெருமாள்சாமி என்பவரிடம் 3 லட்சம் என மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர். இதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் பிரேம் ஆனந்த் மற்றும் அவரின் மனைவி பரமேஸ்வரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.