பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பூட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் தொலைவில் இருந்து வரும் ஏராளமனோர் தங்களது மோட்டார் சைக்கிள்களை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை பார்த்த போக்குவரத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 7 ஸ்கூட்டர்கள், 6 மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை பூட்டினர். மேலும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் 3 பேர் தாங்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என கூறி அபராதத்தை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றுள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது. பயணிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.