வரதட்சணை கேட்டு பெண் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டி பகுதியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திராட்சை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாகித் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அருண்பாண்டியன் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். கடந்த 16-ந்தேதி வரதட்சணை கேட்டு சிவப்பிரியாவுடன் பெரியகருப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த பெரியகருப்பன் திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து சிவப்பிரியா மீதும் பேரன் யாகித் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து பெரியகருப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவப்பிரியாவையும், யாகித்தையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து சிவப்பிரியாவை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிவப்பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிவப்பிரியா ராயப்பன்பட்டி காவல்துறையினரிடம் வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், கணவர் அருண்பாண்டியன், அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் கொடுமைப்படுத்தியதாகவும், பெரியகருப்பன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெரியகருப்பனையும், அருண்பாண்டியனையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி சிவப்பிரியாக பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டியனின் தாய் ஒச்சம்மாள், சகோதரி கனிமொழி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.