லிப்ட்டில் சிக்கிய வயதான தம்பதியினரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவில் விஜிஜான்(84)-மரியா ஜான்(80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் இருக்கும் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து விட்டு நேற்று மாலை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கேரளாவுக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல ரயில் நிலையத்தில் இருக்கும் லிப்டில் தம்பதியினர் ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் கணவன், மனைவி இருவரும் உதவிகேட்டு குரல் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு லிப்ட்டில் சிக்கிய கணவன் மனைவி இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் தீயணைப்பு படை வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் வயதான தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றது தெரியவந்தது.