அரசு பேருந்து மீது லாரி மோதியதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து காலை 9 மணிக்கு அரசு பேருந்து ஒன்று எடக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் எம்.பாலாடா அருகே சென்று கொண்டிருந்த போது கேரட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி ஊரக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.