ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ள நிலையில் சென்ற 10 வருடங்களாக அவர்கள் வெங்கட் ராமானை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். வெங்கட்ராமன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகின்றது. இவருக்கு ஆட்டோ டிரைவர் நண்பர்கள் என சாப்பாடு வாங்கி கொண்டு வந்து தருவார்கள்.
இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வெங்கட்ராமன் வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வீட்டின் கதவை பூட்டி ஜன்னல் வழியாக சாவியை வாங்கிக் கொள்வார். யார் கதவை தட்டினாலும் சாவியை எடுத்து திறந்து வர சொல்லுவார். இந்நிலையில் சென்ற 4 நாட்களாகவே அவருக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. அவருக்கு உதவ யாரும் முன் வராத நிலையில் நான்கு நாட்களாகவே சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினியாக இருந்து சத்தம் போட்டிருக்கிறார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து அவரிடம் இருந்த சாவியை வாங்கி வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதையடுத்து வெங்கட்ராமன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.