Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில்…. செயற்கை கருத்தரித்தல் முறை மூலம்….50 வயது பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது….!!!!

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 50 வயது பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.

சென்னையில் வசித்து வருபவர் 50 வயதுடைய ராதிகா. இவருக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் கருத்தரித்து 7 மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த ராதிகாவிற்கு பிரசவத்தில் ஒரு ஆண், பெண் குழந்தை என்று இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

இதை போன்று 45 வயது வள்ளி என்ற பெண்ணும் திருமணமாகி 17 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. வள்ளியும் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு 29 வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா பேசியதாவது, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் முறையாக 50 வயது கர்ப்பிணி பெண்ணிற்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ராதிகா மற்றும் வள்ளி ஆகிய இருவரும் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதில் பரிசோதித்து பார்த்த போது  இருவரின் குழந்தைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என அறிந்தவுடன் நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் வள்ளிக்கு 29 வாரங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 900 கிராம் எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 900 கிராம் என்பதால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு குழந்தையின் எடை 1.4 கிலோவாக அதிகரித்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |