மே 26-ம் தேதி வருடந்தோறும் கொடைக்கானல் நகரம் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அங்கு நிலவுகின்ற குளுகுளு சீசன் தான். கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதை சமாளிப்பதற்காக மக்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். தன்னிலை மாறாமல் என்றும் இளமையுடம் கொடைக்கானல் காட்சியளிப்பதால் அதை மலைகளின் இளவரசி என்று அழைத்தனர்.
முன்னர் கொடிக்கானல் என்ற பெயரே பின்னாளில் கொடைக்கானல் என்று மருவியது. அதாவது கொடிகளால் சூழ்ந்த காட்டுப்பகுதி என்பது தான் இதனுடைய அர்த்தம். கொடைக்கானல் என்ற மலைவாசஸ்தலத்தை உருவாக்கியது ஆங்கிலேயர்கள் தான். அடர்ந்த வனப்பகுதியாக இருந்த கொடைக்கானலை ஆங்கிலேயர்கள் ஓய்வு இல்லமாக உருவாக்கினார்கள். அந்த ஓய்வு இல்லத்தில் கடந்த 1845 ஆம் வருடம் மே மாதம் 26ஆம் தேதி முதன் முதலில்ஆங்கிலேயர்கள் குடியேறினார்கள். அந்த நாள்தான் மலைகளின் இளவரசி பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கொடைக்கானலுக்கு வெளிமாநிலத்தில் இருந்து மக்கள் வர ஆரம்பித்தார்கள். கொடைக்கானலை பூர்வீகமாக கொண்ட பழங்குடி மக்களை தவிர்த்துவிட்டு சமவெளி, தரை பகுதிகளிலிருந்தும் வெளியாட்கள் 1845 ஆம் வருடம் முதல் குடியேறினார்கள். பழங்குடியின மக்களை தவிர்த்து வெளி மக்கள் குடியேறிய மே மாதம் 26ம் தேதியை கொடைக்கானல் நகரம் பிறந்த நாளாக வருடந்தோறும் கொண்டாடுகிறது.
அதன்படி நேற்று தனது 177 வது அகவையில் கொடைக்கானல் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். எத்தனை வருடங்கள் கடந்து சென்றாலும் எழில் கொஞ்சும் இயற்கை அழகை தன்னகத்தே கொண்டது கொடைக்கானல் என்றும், மலைகளில் இளவரசியாக சுற்றுலா பயணிகளுக்கு திகழ்கிறது என்றனர்.