குருவிகளை பிடித்து விற்பனை செய்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து குருவிகளை பிடிப்பதாக பழனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் பழனி குமார், வனவர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமாரசமுத்திரம் அருகே இருக்கும் வயல்வெளியில் வலை மற்றும் கூண்டுகளுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பழனி ஆவணி மூல வீதியில் வசிக்கும் மாரிகண்ணு(46) என்பது தெரியவந்துள்ளது.
இவர் முனியா வகை குருவிகளை கூண்டு வைத்து பிடித்து ஒரு ஜோடியை 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் இருந்து 2 வலைகள், ஒரு கூண்டு, 11 குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் மாரிக்கண்ணுவை கைது செய்தனர். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று வன உயிரினங்களை பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.