அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 18 வயது இளைஞன் 4 ஆம் வகுப்பில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சல்வரடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதற்கிடையில் இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டின் போது ஒரு சிறுமி சாதுர்யமாக செயல்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த இளைஞன் வகுப்புக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கண்ணில் பட்ட குழந்தைகளை சுட்டுக் கொன்ற போது வகுப்பில் இருந்த மிஹா செரில்லொ என்ற மாணவி உடனடியாக தரையில் படுத்து உள்ளார். ஆனால் மிஹாவிண் தோழிகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் மிஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வலியை பொருத்துக்கொண்டு உயிரிழந்த தனது தோழியின் உடலில் இருந்த ரத்தத்தை மிஹா தனது உடலிலும் உடையிலும் பூசி உயிரிழந்தது போல் படுத்துள்ளார். இதனால் வகுப்பறையில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கருதி குற்றவாளி வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளார். சல்வடொரை போலீசார் சுட்டு வீழ்த்திய பிறகு வகுப்பறையில் காயமடைந்து கிடந்த மிஹாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சிறுமி செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.