மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளியின் வழக்கில் நியாயம் கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட தானிப்பாடி அருகே இருக்கும் பெருங்குளத்தூர் அருந்ததி காலனியை சேர்ந்த சங்கோதி என்பவர் சென்ற 24ஆம் தேதி காயங்களுடன் பிணமாக கிடந்ததை அடுத்து போலீசார் அங்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நிலையில் இவரை இரண்டு பேர் கொலை செய்துள்ளதாகவும் இதை கொலை வழக்காக மாற்றி இருவரையும் கைது செய்யுமாறு இறந்தவரின் மகனும் மனைவியும் புகார் அளித்துள்ளனர்.
நேற்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் மனுவை அளித்தனர். இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்துப் பேசி இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தலித் விடுதலை இயக்கத்தினருடன் சேர்ந்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் சந்தித்து மனு அளித்தார்கள். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இறந்தவரின் வீட்டு முன்பு பந்தல் அமைத்து நியாயம் கேட்டு இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.