Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் – காங். வலியுறுத்தல்

வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் 12 சதவீதமாவது அதிகரிக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் துறை வெறும் 2.9 சதவீத வளர்ச்சியே கண்டுள்ளது.

இது மத்திய அரசின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார திட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையில், 10 ஆயிரம் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எத்தனை நிறுவனங்கள் உருவாயின என்பது யாரும் அறிந்திடாத ஒன்று. விவசாய கட்டமைப்புக்காக ரூ. 2 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசாங்கமோ அதற்காக வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளது.

வரும் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச வருமான திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்” என்றார்.

Categories

Tech |