உரிய டிக்கெட்இன்றி விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் பயணித்தால் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சூழ்நிலையில் விரைவு, மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகிறது. எனினும் பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் (அல்லது) உரிய டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக இருக்கிறது.
சில சமயங்களில் திருட்டு சம்பவங்களும் நடப்பதாக பயணியர் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது “விரைவு ரயில்கள் புறப்படும் போது ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்துகின்றனர். அதன்பின் டிக்கெட் பரிசோதகர்களும் சோதனை மேற்கொள்கின்றனர். இருந்தாலும் சிலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஓடும் ரயில்களில் திடீரென்று சோதனை நடத்தும் அடிப்படையில் “டிக்கெட் பரிசோதகர்கள்” குழு அமைத்து கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் 1,000 ரூபாய்வரை அபராதம் விதித்து வருகிறோம். ஆகவே உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.