வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கோமதி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு நிறுவன நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பதிவு செய்த அனைவரும் தனியார் வங்கிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கோமதி சங்கரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து கோமதி சங்கர் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனை நம்பி 40-க்கும் மேற்பட்டோர் சுமார் 35 லட்ச ரூபாய் பணத்தை கோமதி சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கோமதி சங்கர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கோமதி சங்கரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோமதி சங்கரை நேற்று காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.