ஆற்றூர் பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் பேரூராட்சியில் சில வருடங்களுக்கு முன் நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி உட்பட சுமார் ரூ 66 லட்சத்தில் நடைபெற்ற பணிகள் தரமற்றவை என்று அரசுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சாலை பணிகள் முறைப்படி நடந்துள்ளதா? அல்லது முறைகேடு நடந்து உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி கோட்ட தரக்கட்டுப்பாட்டு பிரிவு கோட்ட பொறியாளர் செல்வநம்பி, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பழைய பதிவேடுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பணிகள் சரிவர நடைபெறாமல் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். இந்த ஆய்வின் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப் போகிறோம் என்று தெரிவித்தார். இதனால் ஆற்றூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.