சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர்.
அப்போது சித்த மருத்துவரான பாலசுப்பிரமணியம் என்பவர் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் சித்தா கிளினிக்கிற்கு தன்னை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.