மர்மமான முறையில் இறந்த தொழிலாளி வழக்கில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி அருகே உள்ள விடுதலைபுரம் நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் பெரியகுறுக்கை கிராமத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில் என்பவருக்கு சொந்தமாக உள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் சென்ற 22ஆம் தேதி முருகேசனின் மனைவி சகுந்தலா பண்ணை தோட்டத்துக்கு கணவரை தேடிச் சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவர் அவர் வெளியே சென்று விட்டதாக கூறியதால் காத்திருந்த அவர் ஒரு மணி நேரம் ஆகியும் வராததால் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து சென்ற 23ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தோட்ட உரிமையாளர் செந்திலும் முருகேசனை வேலைக்கு சேர்த்துவிட்ட தனபால் என்பவரும் முருகேசனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு ரூபாய் 1000 கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்குமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து அரை மணி நேரத்தில் உடல் வலிப்பதாகக் கூறியுள்ளார் முருகேசன். அவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. கொஞ்ச நேரத்திலேயே அவர் மூச்சு திணறி இறந்து விட்டார்.
இதனால் முருகேசனின் மனைவி சகுந்தலா காவல் நிலையத்தில் தனது கணவரின் இறப்பில் மர்மம் இருக்கின்றது. அதனால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதையடுத்து போலீஸார் செந்திலை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை சிருகனுர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் கூறியதாவது, சம்பவத்தன்று முருகேசன் நான் சொல்லும் வேலைகளை சரியாக செய்யாததால் கோபமடைந்து கட்டை மற்றும் அரிவாளால் அடித்தேன். அதனால் முருகேசனுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு நானும் தனபாலும் சேர்ந்து முருகேசனின் வீட்டிற்குச் சென்று அவரின் மனைவியிடம் அவரை ஒப்படைத்து விட்டு வந்தோம். அதன்பின்னரே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த விட்டார் என கூறியுள்ளார். இதனால் போலீசார் செந்தில் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.