குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கஃபீல் கான் வன்முறையைத் தூண்டும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி நேற்று உத்தரப் பிரதேச சிறப்புக் காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இன்று மும்பை பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா சென்றுள்ள கஃபீல் கானை எதிர்பாராத விதமாகக் கைது செய்துள்ளனர்.
கஃபீல் கானுக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது அங்கு தலைமை மருத்துவராக பணியாற்றியவர் கஃபீல் கான். குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் நிகழ்ந்த மின்வெட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுதான் காரணம் என்று அவர் அறிக்கை கொடுத்தது அரசுத் தரப்பைக் கோபப்படுத்தியது. இதன் காரணமாக யோகி ஆதித்தியநாத்தின் உத்தரப் பிரதேச அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அவர் தற்போது ஆளாகியுள்ளார்.