ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் 1247 பேருக்கு காவலருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடியில் இருக்கின்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, சட்டீஸ்கர், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட்,, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 1247 பேர் காவலர்களுக்கான பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று காலை ஆவடி சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தில் நடந்தது.
இந்த விழாவில் பயிற்சி மைய முதல்வர் மற்றும் டி.ஐ.ஜி கேவல்சிங் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக சி.ஆர்.பி.எப் தெற்கு மண்டல ஏ.டி.ஜி சத்ருவேதி பங்கேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டி உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப் துணை கமாண்டன்ட் சந்திரசேகரன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு பயிற்சி மையத்தில் 44 வாரங்கள் கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், 4 வாரங்கள் அடர்ந்த காடுகளில், மலைகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் விதமாக ஏழு நாட்கள் உளர் உணவு பொருட்களுடன் கூடிய காடுகளில் தங்கி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயிற்சியில் எட்டு நிலைகொண்ட 200, 100 ,50, 25 மீட்டர் தொலைவில் இருக்கின்றதை துல்லியமாகக் குறி பார்த்து துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கட்டுக்கோப்பாக வைப்பதற்கு நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி, ஓடுதளம், நீச்சல் குளம் பயிற்சி ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முடிந்த பின் வெளியே செல்லும் வீரர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.