பிரிட்டன் இளவரச தம்பதியான ஹாரி-மேகனின் சிலைகள், மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் தன் 96-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தன் 25 வயதில் நாட்டின் அரியணையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தற்போது வரை சுமார் 70 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார். இதனை கொண்டாடக் கூடிய வகையில் அடுத்த மாதம் 2-ம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் மேடம் துசாட்ஸ் என்ற புகழ் வாய்ந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரின் சிலைகளும் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் ராஜ குடும்பத்தினரின் மெழுகு சிலைகளுக்கென்று தனி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2020 ஆம் வருடத்தில் இளவரசர் ஹாரியும் அவரின் மனைவியும் பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்தனர். எனவே, அவர்களின் சிலை அந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்திருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகாராணியின் 70 வருட ஆட்சி காலத்தை கொண்டாடுவதற்காக மீண்டும் அவர்களின் சிலை அந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருக்கிறது.