சீனாவில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் வூகான், ஹூவாங்காங் உட்பட பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு வாழ்ந்து வரும் மக்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதேபோல வெளியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வைரஸின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் 18 நாடுகளில் பரவி கிடப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஜெர்மனியின் லூப்தன்ஸா விமான நிறுவனம் சீனாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தற்போது நிறுத்தியுள்ளது.
அதேபோல அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் விமான சேவையை சில இடங்களில் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையளிப்பதற்கு ஹூவாங்காங் நகரில் முதல் மருத்துவமனையை கடந்த இரு நாட்களுக்கு முன் சீன அரசு திறந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூகான் மாகாணத்தில் 1,300 படுக்கை வசதி கொண்ட புதிய மருத்துவமனையை கட்டும் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த பணி நடைபெற்று வருவதை டைம்லாப்ஸ் முறையில் வீடியோ எடுக்கப்பட்டது தற்போது வெளியாகியுள்ளது.
இந்த மருத்துவமனை அடுத்த மாதம் 5-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் 6,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மருத்துவமனைக்கு லீஷென்ஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் விறுவிறுப்பாக கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனை கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி தற்போது 3-ல் ஒரு பங்கு முடிவடைந்துள்ளதாக வூகான் மாகாண அரசு கூறியுள்ளது.
இதனிடையே வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் முகமூடி அணிந்து வரும் மக்கள், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் வேறொரு மாற்று வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது 20 லி. கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் மற்றும் பெரிய பாலித்தீன் பைகளையும் முகத்தை மூடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வெளியில் எங்கு சென்றாலும் அதனை அணிந்து கொண்டே பயணித்து வருகின்றனர்.