தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் தான் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அருகே இருந்த பெண்மணி கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை சொல்வதற்கு தனக்கு தெரிந்த நண்பர்கள் இருப்பதாகவும் அவர்களிடம் தீர்வு கிடைக்கும் எனவும் வனஜாவிடம் திருப்பத்தூரை சேர்ந்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வனஜா அவரைத் தொடர்புகொண்டபோது கடந்த 12ஆம் தேதி தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வர சொல்லி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநரான வெங்கடேசன் என்பவர் வீட்டிற்கு காரில் அழைத்து சென்று கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்து இருக்கின்றனர்.
அந்த சோதனையில் பெண் குழந்தை என தெரிந்ததும் அதனை அழிக்க ஜோதியிடம் வனஜா சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். இதனை அடுத்து கருக்கலைப்பு செய்வதற்கு சுமார் 20 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார். அதன்பின் 14ஆம் தேதி பணத்துடன் வந்த வனஜாவிற்கு வெங்கடேசன் வீட்டில் தர்மபுரி அடுத்த அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்ற செவிலியர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கருக்கலைப்பு பணி நடைபெற்றது. இதில் கருவில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கும் போது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டது. இதனால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்து மயங்கி உள்ளார்.
ஆனால் கருக்கலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு அதனை மறைத்து அந்த பெண்ணை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன்பின் வீட்டிற்கு சென்ற வனஜாவிற்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பெயரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் தர்மபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மருத்துவர் கனிமொழிக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் வீட்டில் கருவுற்ற பெண்கள் 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு அழைத்து சென்றதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மருத்துவர் கனிமொழி தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சுதாகர்தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார், செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரும் பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி கைது செய்துள்ளனர்.இந்த கும்பலில் கற்பகம், ஜோதி, சதீஷ் போன்றோர் எந்தவித மருத்துவ படிப்பும் படிக்காமல் இடைத்தரகர்கள் வெங்கடேசன், சரிதா மூலமாக 6 கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி நகர காவல்துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ஸ்கேன் பரிசோதனை கருவியும், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோ போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு வேறு ஏதேனும் இடைத்தரகர்கள் உடன் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.