தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால் மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப்பை பிரிண்ட் ஆகி வரும் மஞ்சப்பை இயந்திரம் பொது இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக அரிசி,பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன் சேர்த்து மஞ்சப்பை திட்டத்தையும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும் அவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து இன்னும் மறையவில்லை. அதனால் துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால் பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும்.
அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்கள் வாங்கும்போது பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகம் செய்வதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் ரேஷன் கடைகளில் மஞ்சப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.அதனால் விரைவில் ரேஷன் கடைகளில் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.